Friday, December 14, 2012

அம்மா

தீச்சட்டியைத் தூக்கிக் கொண்டு அவளது இறுதிப்பயணத்தை தொடங்கி வைத்ததிலிருந்து, பிடிசாம்பலாக அவளை சமுத்திரத்தில் கரைத்தது வரை நாற்பது+ ஆண்டுகளுக்கான எத்தனையோ ஞாபகங்கள் அலை மோதின.  பொதுவாக எல்லாரும் கூறியது, “கஷ்டப்படாமல் கஷ்டப்படுத்தாமல் போய் சேர்ந்து விட்டாள், கொடுத்து வைத்தவள், நல்ல பிள்ளைகள், நன்றாக பார்த்துக் கொண்டார்கள்”.  அவள் கொடுத்து வைத்தவளும் கிடையாது, நாங்கள் சுமாரான பிள்ளைகள் என்ற 2 விஷயங்களும் எனக்குத் தெரியும். 

ஆண் துணையில்லாமல் தனியாளாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க அவள்  பட்ட பாடு அசாதாரணமானது.  உறவினரிடம் உதவி கேட்பது கூட அவளது இயல்புக்கு ஒவ்வாத ஒன்று.  கடைசி 3 மாதங்கள் படுக்கையில் இருந்தது அவளுக்கு பெரிய கஷ்டமெல்லாம் கிடையாது.  வாழ்க்கையில் எவ்வளவோ இன்னல்களை சந்தித்திருக்கிறாள்!

கவனித்துக் கொள்ள பத்து பேர் இருந்தும், பிறரை நம்பி வாழும் உபயோகம் இல்லாத வாழ்க்கை தேவையில்லை என்று மூச்சை நிறுத்திக் கொண்டாள் என்று தான், கடைசி நிமிடத்தில் கூட இருந்த (அந்த அளவுக்காவது புண்ணியம் செய்திருக்கிறேன்!) எனக்குத் தோன்றியது.  அமைதியான ஒரு புன்னகையோடு மரணத்தை ஏற்றுக் கொண்டாள் என்று தான் கூறுவேன்.  பிள்ளைகள் நாங்கள், அவளை, யார், எவ்வகையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவளது அப்ரூவல் இல்லாமல் போட்டு வைத்திருந்த திட்டத்தை ஏளனம் செய்து விட்டு ஒரு நொடியில் போயே விட்டாள்.

’அம்மா நம்பர் ஒன்’ என்றோ, அனைத்திலும் பர்ஃபெக்ட் என்றோ அவளைக் கூற மாட்டேன். ஆனால், சில பிரத்யேக குணங்களை உள்ளடக்கி இருந்தாள்.  அந்த இளமைக்கால வறுமையிலும், ஒரு போதும் மனம் தளரவே மாட்டாள், கஷ்டம் என்று ஒரு புலம்பல் கிடையாது, இயல்பாக பிறர்க்கு மனமிரங்குவது, உதவுவது என்பது அவளிடமிருந்து மட்டுமே நான் கற்றதும் பெற்றதும்!

குடும்பத்தில் எல்லாரை விடவும் அவள் கெட்டிக்காரியாக இருந்தும், பெண் என்பதால் மேல் படிப்பு படிக்க முடியாமல் போனது என்று பெங்களூர் மாமா அடிக்கடி சொல்லுவார். அவள் போன பிறகு வந்த மடல் வழி இரங்கல் செய்திகளும், பிறர் என்னிடம் பேசியதும், அவள் கூடவே 40+ ஆண்டுகள் இருந்தும், அவளைப் பற்றி நான் முழுமையாக அறியாததை பறைசாற்றின!  காரணம் எளிமையானது, செய்ததை சொல்லிக் கொள்வதை அவள் விரும்பியதில்லை. 

எவ்வளவோ ஞாபகங்கள்! இப்போது கோர்வையாக எழுத கை வரவில்லை. பொறியியல் கல்விக்கான முதல் லிஸ்ட்டில் என் பெயர் இல்லை, வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருந்தேன்.  கிடைக்க ஓரளவு வாய்ப்பிருந்ததும் எனக்கு விவேகானந்தா கல்லூரியில் பி.எஸ்.ஸி சீட் கிடைத்து சேர்ந்தும் விட்டதாலும், குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாகவும் எனக்கு பொறியியலில் பெரிய ஆர்வமில்லை.

அந்த சூழலிலும், படிப்பில் மிக்க ஆர்வமிருந்த கெட்டிக்கார மகனை எஞ்சினியர் ஆக்க வேண்டும் என்பதில் அவளிக்கிருந்த திடமும், அதற்கு அவள் மேற்கொண்ட முயற்சியும், எனக்களித்த ஊக்கமும் அசாதாரணமானவை.  அதை விட அசாதாரணமானதாக நான் நினைப்பது, எந்த ஒரு தருணத்திலும், நான் எஞ்சினியர் ஆனதற்கு தான் மட்டுமே காரணம்
என்பதை சுட்டிக்காட்டாத, பதிலுக்கு எதுவுமே எதிர்பார்க்காத அவளது பெருந்தன்மை!

அதீத வறுமையிலும், அது அதிகம் தெரியாத, நாங்கள் உணராத வகையில் எங்களை அவள் வளர்த்தது எப்படி என்பது இன்றளவும் வியப்பு தான்.  ஆசிரியை தொழிலோடு, ஹிந்தி டியூஷன், புடவை வியாபாரம், சீட்டு பிடிப்பது என்று சாப்பாடு, தூக்கமில்லாமல் உழைத்திருக்கிறாள்.  பள்ளிக்காலத்தில் அவள் உட்கார்ந்து சாப்பிட்டு நான் பார்த்ததில்லை என்பது இப்போது உறைக்கிறது! 

 பள்ளிக்காலத்தில், நனறாக படித்து, மதிப்பெண்களையும், பரிசுகளையும் அள்ளிக் கொண்டு வந்து நான் காட்டியபோதும், ஆர்ப்பாட்டம் துளியுமின்றி, “குட்” என்று மட்டும் சொல்லி, ‘நீ நனறாக படித்து முன்னுக்கு வருவது நியமிக்கப்பட்டது’ என்பதை எளிமையாக தெளிவாக எனக்கு அப்போதே புரிய வைத்ததை இப்போது நினைக்கையில், மனம் கனக்கிறது.

வயதான பின் ஏற்பட்ட உடல்நிலைப் பிரச்சினைகளுக்கு டாக்டரிடம் போய் விட்டு வந்த விஷயங்களைக் கூட என்னிடம் பெரிதாகக் கூறியதாக நினைவில்லை.  ஒன்றுமே முடியாத இந்த கடைசி ஆறு மாதங்கள் தவிர்த்து, நான் அவளுக்கு உதவியதாக கூற முடியாத அளவில், என்னை பெரும் கடனாளியாக்கி விட்டு சட்டென்று சென்று விட்டதை நினைக்கையில், வேதனையை விட வெறுமையே மிஞ்சி நிற்கிறது!

எ.அ.பாலா

பிற்சேர்க்கை: அவள் தானமளித்த கண்கள் யாரோ இருவருக்கு ஒளி தரப் போகிறது என்பது  மட்டுமே இந்தச் சூழலில் ஆறுதல்!

17 மறுமொழிகள்:

பூங்குழலி said...

நெகிழ செய்த பதிவு -உங்கள் அம்மா நிஜத்திலும் சாதனை பெண் தான் ..நீங்கள் பாக்கியவான்

பரத் said...

மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு :(

said...

ஆறுதல் கூறுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. காலம் மட்டுமே ஆற்றும். விரைவில் மீண்டு வாருங்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

ஆறுதல் கூறுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. காலம் மட்டுமே ஆற்றும். விரைவில் மீண்டு வாருங்கள்.

கோவி.கண்ணன் said...

ஆழ்ந்த வருத்தங்கள்

Rajesh Padmanabhan said...

:(

துளசி கோபால் said...

மனசு நெகிழ்ந்துவிட்டது பாலா.

அம்மாவின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றோம்.

உங்கள் நினைவில் எப்போதும் வாழ்வார்கள்.

VENG said...

தாய் எப்போதும் தன் பிள்ளைகளிடம் கடைசி காலத்தில் என்ன எதிர்பார்கிறார்கள் தெரியுமா? தன்கூட வைத்துகொண்டு என்னமா சாப்பிடின்களா, உடம்பு நல்லா இருக்குதுங்களா, இப்படிப்பட்ட ஆறுதல் வார்த்தைகள்தான். பலபேர் பணம் கொடுத்தால் போதும் கடமை முடிந்தது என நினைக்கிறார்கள். அவர்களுக்கு உரைக்கும்படி இருக்கிறது உங்கள் பதிவு. அம்மாவின் அன்பை உணர்ந்த உங்களுக்கு இறைவனாகிவிட்ட உங்கள் அம்மாவின் ஆசி எப்போதும் இருக்கும். என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

பாலாஜி
கூடவே 25 வருடங்களுக்கும் மேலாக பார்த்துப் பழகியிருக்கிறேனே...இந்த மாதிரி அம்மா அமைய நீயும் கொடுத்து வைத்தவன்.இதை விடஎன்னிடம் சொல்ல வேறொன்றும் இல்லை.அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

அன்புடன்
ச.சங்கர்

இராஜராஜேஸ்வரி said...

அவள் தானமளித்த கண்கள் யாரோ இருவருக்கு ஒளி தரப் போகிறது என்பது மட்டுமே இந்தச் சூழலில் ஆறுதல்!/

அம்மாவின் உயர்ந்த ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் !

dondu(#11168674346665545885) said...

சில மாதங்க்ளுக்கு முன்னால் அவரை பார்த்த சமயத்தில் என்னை அடையாளம் கண்டு கொண்டது மனதுக்கு நிறைவைத் தந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

ஆறுதல் கூறிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.

தருமி said...

கனத்த பதிவு. நான் உணராத பல விஷயங்களை உணர்த்தியது. காலம் ஆறுதல் தரட்டும்.

-/பெயரிலி. said...

பாலா
இப்போதெல்லாம் வலைப்பதிவுகள் வருவதில்லையாதலால், உங்கள் தாயார் இறந்துபோன பதிவினை இன்றே கண்டேன்.
உங்களின் துயரைக் காலம் மட்டுமே ஆற்றமுடியுமென நம்புகிறேன்.
திடமாயிருங்கள்.

enRenRum-anbudan.BALA said...

தருமி, பெயரிலி,

இந்தச் சூழலில், நிஜமாக உங்கள் வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளிக்கின்றன. நன்றி.

maithriim said...

//இயல்பாக பிறர்க்கு மனமிரங்குவது, உதவுவது என்பது அவளிடமிருந்து மட்டுமே நான் கற்றதும் பெற்றதும்// உங்கள் வாழ்க்கையை வளமாக்கி சென்றதற்கான சான்றாக இந்தப் பெரும் சொத்து ஒன்றே போதுமே!
அம்மாக்கள் கஷ்ட்டபடுவதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. தாங்க இயலா சோகத்தையும் கவலையயும் தரும்.

எழுத்தாளர் சுஜாதாவின் தந்தை சொன்னது போல நாம் நம் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்ததை நம் குழந்தைகளுக்குச் செய்து மகிழ்ச்சி அடைய வேண்டும்.

amas32

enRenRum-anbudan.BALA said...

//நம் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டும் என்று நினைத்ததை நம் குழந்தைகளுக்குச் செய்து மகிழ்ச்சி அடைய வேண்டும்.//

நன்றி தங்கள் வாசிப்புக்கும், கருத்துக்கும். நீங்கள் கூறியுள்ளது நிஜமாகவே, ஆறுதல் தரும் ஒரு வழியாக பார்க்க முடிகிறது. அதற்கும் ஒரு நன்றி.....

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails